மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பேரணி


   புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் புகையிலை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
   அரசு பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி கீழராஜ வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக இந்த பேரணி நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பேரணியில் பங்கேற்று புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
   மேலும் புகையிலை அரக்கன் என்ற உருவ பொம்மையை உருவாக்கி அதனை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்த வினோத நிகழ்வும் பேரணியில் நடைபெற்றது. பேரணியின் போது புகையிலையின் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
                                       -இணைய செய்தியாளர் - s.குருஜி

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

      இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், 2 விசைப்படகுகளில் நேற்று காலையில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் 16வது கடல் மைல் பகுதியில் வலை விரித்து 19வது கடல் மைல் வரை, மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் படகுகளை சேதப்படுத்தியதுடன், மீன்பிடி வலைகளையும் அறுத்து எரிந்துள்ளனர். இந்த தாக்குதலில் 8 மீனவர்களும் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 6 பேருக்கும் லேசான காயம் என்பதால், அவர்கள் தங்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும்.

படித்ததில் மிகவும் பிடித்த விசயம்
(Lord Sivalingam, Iraivan Temple, Bangalore)

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில்
இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும்.

பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது.

"நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில்

சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும்

உன்னை வந்தடையும்"

என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம்.

"வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும்" என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.

உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம்.

வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.
-வாஸ்த்து பிரியன்

இது ஒரு ஆர்பாட்டம் இல்லாத டுபாகூர்!

       கடந்த சில ஆண்டுகளாக பல விசித்திரமான செய்கைகள் மூலம் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர் விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் கூறிக் கொண்டு பல இடங்களில் பிரமாண்ட ஆசிரமங்களை எ
ழுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் தடா அருகில் வரதையபாளையத்தில் பிரமாண்டமான ஆசிரமத்தைக் கட்டியுள்ள இந்த விஜய்குமார் நாயுடு, தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம் வசூலிக்கிறார். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம் செலுத்த வேண்டுமாம். வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தினர்களை 21 நாள் பேக்கேஜ் என்ற திட்டத்தின் கீழ் தங்க வைத்து போதை மருந்து உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத கேளிக்கைகளை வழங்குகிறார்களாம் இந்த ஆசிரமத்தில். அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 வரையும் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. விஜய்குமார் நாயுடு நடத்தும் 9 நிறுவனங்களின் மீதும் புகார்கள் தரப்பட்டுள்ளன. இது தவிர, ஏராளமான பெண்கள் வரவழைக்கப்பட்டு, வெளிநாட்டவர்களுக்கு விருந்தளிக்கப்படுவதாகவும் வரதையபாளையம் போலீஸில் புகார் செய்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
-இணைய செய்தியாளர் - தங்கமுருகேசன்

வீழும் ரியல்எஸ்டேட்

கடந்த சில வருடங்களாக பூதாகர வளர்ச்சி கண்டிருந்த ரியல் எஸ்டேட் துறை இப்போது சரிந்து கொண்டு வருகிறது.போன வருட இதே கால சூழலை ஒப்பிடும் போது இன்றைய சூழலில் 10-25% வரை தமிழகம் முழுக்க நகரை பொறுத்து விலை இறங்கி உள்ளது.

 போன சட்டமன்ற தேர்தலின் பின் தள்ளாடிகொண்டிருந்த ரி.எ.துறை  எரிபொருள், அத்யாவசிய பொருள், கட்டுமான பொருள், போக்குவரத்து போன்ற விலையேற்றத்தால் நல்ல சரிவை காண ஆரம்பித்துள்ளது. MP தேர்தலின்பின் இந்தியாவுக்குள் வந்த கறுப்பு பண முதலீடுகள் வந்து சேர்ந்து முடிந்தபடியால் புதிய வாங்குதல் நின்று போனதும், அரசியல்வாதிகளின் மேல் வரும் நில ஊழல் புகார்களாலும் அவர்களின் ரி.எ.முதலீடுகள் நின்று போயின. ரி.எ எழுச்சியால் பெரிய அளவில் பயனடைந்தவர்கள் அரசியல்,பெரிய அதிகாரிகள் மற்றும் பணமுதலைகளின் அல்லக்கைகள்தான் என்பதை கொண்டே எந்த பணம் விளையாடியதென்பதை அறியலாம்.

 மோசமான பொருளாதார சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தினசரி செலவுகளுக்கு முணகும் மக்களால் முதலீடு பற்றி யோசிக்க முடியவில்லை. இதில் ஆச்சரியம், லட்சுமிகர IT ஊழியர்களும் இதே புலம்பலை ஆரம்பித்துள்ளது தான். விவசாயத்தில் உர விலையேற்றம், 100 நாள் திட்டத்தால் கூலி உயர்வு/ஊரக தொழில்துறை பாதிப்பு, மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, நெசவில் சீன போட்டி, சாய கழிவு, நூல் விலையேற்றம் என அனைத்து துறைகளும் படுத்துவிட்டது.

இவற்றை முன்கூட்டியே அறிந்த தேசிய ரி.எஸ்டேட் பெருநிறுவனங்கள் போன தீபாவளியின் போதே 20% தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது ஞாபகமிருக்கும்.

 புதிய கட்டுமான பணிகளும் இதே வேகத்தில் குறைந்துள்ளது. தற்போது வாங்குவதை விட 6 மாதங்கள் முடிவை தள்ளி போடுவதால் நிலவிலைகளும் கட்டுமான பொருள் விலையும் பெருமளவு குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விலை வீழ்ச்சியால் வீடு என்பதை கனவாக நினைத்த மக்கள் மனதில் சிறு நம்பிக்கை துளி ஏற்பட்டுள்ளது.

 எது எப்படியோ, கோயில், ஏரி-குளம், விளைநிலம், பள்ளி என்று மயானம் முதல் மந்தைவெளி வரை கற்களை நட்டு கூறு போட்ட ரி.எஸ்டேட்காரர்களிடம் இருந்து மிஞ்சியுள்ள நிலங்கள் தப்பித்தன.
-N.Sasikumar